Skip to main content

Syndicate contentEconomy

இந்தியாவின் உருக்கு உற்பத்தி 66.20 லட்சம் டன்னாக உயர்ந்தது

May 23, 2013 ஆக்கம் senthilkumar

சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 66.20 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 63.90 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சர்வதேச சராசரி வளர்ச்சி அளவான, 1.2 சதவீதத்தை காட்டிலும், மூன்று மடங்கு அதிகம் என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. சென்ற ஜனவரியில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 3.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி 7% உயர்வு

May 23, 2013 ஆக்கம் senthilkumar

நடப்பு காபி பருவத்தில் (அக்.,-செப்.,), சென்ற மார்ச் வரையிலான அரையாண்டில், சர்வதேச காபி ஏற்றுமதி, 7% உயர்ந்து, 5.61 கோடி மூட்டைகளாக (ஒரு மூட்டை-60 கிலோ) உயர்ந்துள்ளது.கடந்த 2011-12ம் காபி பருவத்தில், இதே காலத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, 5.24 கோடி மூட்டைகளாக இருந்தது.  வியட்னாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து, அதிக அளவில் காபி ஏற்றுமதி செய்யப்பட்டதால், மதிப்பீட்டு காலத்தில், சர்வதேச காபி ஏற்றுமதியில், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என, உலக காபி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.7,477 கோடி

May 22, 2013 ஆக்கம் senthilkumar

இந்திய ரயில்வே ஏப்ரல் மாதத்தில், விளை பொருள்கள் போக்குவரத்து மூலம் சரக்கு கட்டண வருவாயாக ரூ.7,477.30 கோடியை ஈட்டியுள்ளது. சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பிரிவுகள் மூலம் ரயில்வே துறை வருவாய் ஈட்டி வருகிறது. உடனடி பயணச்சீட்டு, முன்பதிவு, சீசன் பயணச் சீட்டு மற்றும் தட்கல் போன்றவை பயணிகள் வருவாய் பிரிவில் அடங்கும். சரக்கு வருவாய் பிரிவில் வேளாண் விளை பொருள்கள், மற்றும் அனைத்து விதமான சரக்குகளும் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் நிலக்கரியை எடுத்துச் சென்றதன் வாயிலாக மட்டும் ரூ.3,420.74 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இணைப்பு - கையகப்படுத்தல் மதிப்பு 166 கோடி டாலராக சரிவு

May 21, 2013 ஆக்கம் senthilkumar

சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியா நிறுவனங்கள் மேற்கொண்ட இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, 166 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இதை, கணக்கு தணிக்கை மற்றும் ஆலோசனை நிறுவனமான கிரான்ட் தார்ன்டன் தெரிவித்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், 39 ஒப்பந்தங்கள் மூலம், 166 கோடி டாலர் மதிப்பிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டன. சென்ற ஆண்டின் இதே மாதத்தில், பல்வேறு நிறுவனங்களிடையே, 197 கோடி டாலர் மதிப்பிலான, 60 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருந்தன.

கம்ப்யூட்டர் விற்பனை 27 லட்சமாக அதிகரிப்பு

May 21, 2013 ஆக்கம் senthilkumar

நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜன.,-மார்ச்), நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, கடந்தாண்டின் இதே காலாண்டை விட, 7.5% அதிகரித்து, 27.10 லட்சமாக உயர்ந்துள்ளது என, இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டீ.சி.,) தெரிவித்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில், "பிராண்டட்' கம்ப்யூட்டர் விற்பனை, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வங்கி, காப்பீடு, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், கம்ப்யூட்டர்களுக்கான தேவை அதிகரித்ததையடுத்து, இவற்றின் ஒட்டு மொத்த விற்பனை, சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.

எல்.ஐ.சி. நிறுவனத்தின் முதல் பிரிமிய வருவாய் 15% உயரும் என மதிப்பீடு

May 21, 2013 ஆக்கம் senthilkumar

எல்.ஐ.சி.யின் முதல் பிரிமிய வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 15 சதவீதம் அதிகரிக்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுஷோபான் சர்க்கார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில், இந்நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய் 6.5 சதவீதம் குறைந்து ரூ.81,500 கோடியிலிருந்து ரூ.76,200 கோடியாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதாரண காப்பீட்டு பாலிசிகள் விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம், பங்கு சார்ந்த காப்பீட்டு பாலிசிகள் நுகர்வோரை அதிகம் ஈர்க்கவில்லை. இதன் காரணமாக, பிரிமிய வருவாய் சரிந்துள்ளதாக தெரிகிறது.

கடன்பத்திரங்களில், பரஸ்பர நிதி துறை முதலீடு ரூ.4.74 லட்சம் கோடி

May 20, 2013 ஆக்கம் senthilkumar

இந்தியாவிலுள்ள 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் கடன் பத்திரங்களில் மேற்கொண்ட நிகர முதலீடு 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.4.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 12 ஆண்டுகளாக கடன் பத்திரங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 6.21% சரிவு

May 18, 2013 ஆக்கம் senthilkumar

நடப்பாண்டு ஏப்ரலில், நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகளின் அளவு, 4.35 கோடி டன்னாக குறைந்து உள்ளது.இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், கையாளப்பட்ட சரக்கை (4.63 கோடி டன்) விட, 6.21 சதவீதம் குறைவாகும் என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 66.44 கோடியாக உயர்வு

May 17, 2013 ஆக்கம் senthilkumar

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.எம். சேவையில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 0.5% மட்டும் அதிகரித்து 66.44 கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 66.09 கோடியாக இருந்தது. இந்திய செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.

கைவினை பொருட்கள் ஏற்றுமதி 13% வளர்ச்சி

May 17, 2013 ஆக்கம் senthilkumar

இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 13% அதிகரித்து, 26 கோடி டாலராக (1,430 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 23 கோடி டாலராக (1,265 கோடி ரூபாய்) இருந்தது என, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.பி.சி.எச்.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், கவரிங் நகைகள் ஏற்றுமதி, 40.6% என்ற அளவில் சிறப்பாக அதிகரித்துள்ளது.

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.