Skip to main content

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ்: சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வாங்கியது

July 14, 2012 by senthilkumar

ஆண்டுக்கு 22,314 கோடி ரூபாய் விற்று முதலை கண்டு வரும், முருகப்பா குழுமத்தின் ஓர் அங்கமாக, டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா (டி.ஐ.ஐ.,) திகழ்கிறது. இந்நிறுவனம், கோவையைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை, 464 கோடி ரூபாய்க்கு வாங்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பங்குச்சந்தை:மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள சாந்தி கியர்ஸ் நிறுவனம், தொழில் துறைகளுக்கு தேவையான கியர்கள், கியர் பாக்ஸ்கள், கியர்டு மோட்டார்கள், கியர் அசெம்பிளிகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் தயாரிப்புகள், உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும், இந்நிறுவனத்தின், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, பி.சுப்ரமணியன் செயல்பட்டு வருகிறார். முதல் தலைமுறை தொழில் அதிபரான இவருடைய, சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் 44.12 சதவீத பெரும்பான்மை பங்குகளை, டி.ஐ.ஐ., நிறுவனம் கையகப்படுத்துகிறது. இது தவிர, 26 சதவீத பங்குகளை வெளிச் சந்தையிலிருந்து வாங்கவும், டி.ஐ.ஐ., நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆக, இந்த கையகப்படுத்தலின் மதிப்பு 464 கோடி ரூபாயாகும்.
பங்கின் விலை:சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின், ஒரு ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றை, டி.ஐ.ஐ., நிறுவனம் 81 ரூபாய்க்கு வாங்குகிறது. வெளிச் சந்தையிலிருந்து பெறப்படும் பங்குகளுக்கும், இதே தொகை வழங்கப்படும் என, தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று சென்ற வியாழன் அன்று, 60 ரூபாய் என்றளவில் இருந்தது. இது, குறித்த அறிவிப்பு வெளியானதையடுத்து, நேற்று இதன் பங்கின் விலை 63.15 ரூபாயாக உயர்ந்தது.
சாந்தி கியர்ஸ் தரப்பில், நிறுவனர் சுப்ரமணியம் கொண்டுள்ள, 34.57 சதவீத பங்குகள் (2.83 கோடி), சாந்தி ஜெனரல் பைனான்ஸ் நிறுவனம் கொண்டுள்ள 0.86 சதவீத பங்குகள் (7 லட்சம்), சாந்தி சோஷியல் சர்வீசஸ் கொண்டுள்ள 8.69 சதவீத பங்குகள் (71 லட்சம்) ஆகியவற்றை சேர்த்து, ஒட்டு மொத்த அளவில், 44.12 சதவீத பங்குகளை (3.60 கோடி) டி.ஐ.ஐ., நிறுவனம் வாங்குகிறது.
சாந்தி கியர்ஸ் நிறுவனத்திற்கு, கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வார்ப்பட பிரிவையும் சேர்த்து,
6 தொழிற்சாலைகள் உள்ளன. எந்தவித கடனும் இல்லாத சாந்தி கியர்ஸ் நிறுவனம், கடந்த 2011-12ம் நிதியாண்டில், 178 கோடி ரூபாய் விற்றுமுதலில், 28 கோடி ரூபாயை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது.
முருகப்பா குழுமம்:சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், முருகப்பா குழும நிறுவனங்கள், சைக்கிள்கள், சர்க்கரை, வேளாண் இடு பொருட்கள், உர வகைகள், சாணைத்தாள், சாணை கற்கள், வாகன உதிரிபாகங்கள் என, பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. இவை தவிர, நிதி, காப்பீடு போன்ற துறைகளிலும் இந்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
நிகர லாபம்:இக்குழுமத்தின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, டி.ஐ.ஐ., நிறுவனம், சாந்தி கியர்ஸ்-ஐ கையகப் படுத்தியதன் வாயிலாக, கோவையில் கால்பதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டி.ஐ.ஐ., நிறுவனம், சென்ற 2011 - 12ம் நிதியாண்டில், 3,490 கோடி ரூபாய் வருவாயில், 180 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள் ளது.இந்த கையகப்படுத்தல் குறித்து, முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவரும், டியூப் இன்வெஸ்ட் மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எம்.எம். முருகப்பன் கூறியதாவது:
சாந்தி கியர்ஸ் நிறுவனம், தொழில் துறைக்கான கியர்கள் மற்றும் அது தொடர்பான சாதனங்கள் தயாரிப்பில், அமைப்பு சார்ந்த மிகப் பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு, உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் வாடிக்கை நிறுவனங்கள் உள்ளன.சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம், முருகப்பா குழுமத்தின் வர்த்தகமும், பொறியியல் துறையில் பங்களிப்பும் அதிகரிக்கும். எங்களுடைய வாடிக்கை நிறுவனங்களுக்கு மேலும் சிறப்பாக சேவை அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
வாடிக்கை நிறுவனங்கள்:இது குறித்து, டி.ஐ.ஐ., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எல்.ராம்குமார் "தினமலர்' நாளிதழுக்கு அளித்த விவரங்கள் வருமாறு:சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம், எங்களுடைய சேவை பல்வேறு துறைகளுக்கு சென்றடையும்.சாந்தி கியர்ஸ் நிறுவனத்திடம், தொழில் துறை சாதனங்கள் தயாரிப்பிற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய சாதனங்கள், கருவிகள் உள்ளன. இதன் வாயிலாக, பல மதிப்பு கூட்டப்பட்ட சாதனங்களை, வாடிக்கை நிறுவனங்களுக்கு வழங்க முடியும்.குறிப்பாக, இந்த கையகப்படுத்தல் மூலம், நிறுவனத்தின் செயல்பாட்டை குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பான அளவில் அதிகரிக்க முடியும். இவ்வாறு ராம்குமார் கூறினார்.
செய்தி வெளியிட்ட தரப்பு: தின மலர் நாளிதழ்

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.